நீதிமன்றத்தில் உதவி

Help at court - Tamil (தமிழ்)

நீதிமன்றத்தில் உதவி பெறுவதற்குப் பல வழிகள் உள்ளன. லீகல் எய்டு NSW பணியிலுள்ள வழக்கறிஞர்களை, NSW முழுவதிலும் உள்ள எல்லா உள்ளூர் நீதிமன்றங்கள் மற்றும் பிற நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களுக்கு அனுப்புகிறது. அந்த நாளில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளவர்களுக்கு, தங்களுக்கென்ற வழக்கறிஞர் இல்லாதவர்களுக்குப் பணியிலுள்ள வழக்கறிஞர்கள் உதவுகிறார்கள்.

பணியிலுள்ள வழக்கறிஞர்கள் லீகல் எய்டு NSW வில் வேலை செய்பவர்களாக இருப்பார்கள் அல்லது உங்களுக்கு உதவுவதற்கு லீகல் எய்டு NSW ஆல் நிதியளிக்கப்படும் தனியார் வழக்கறிஞர்களாக இருப்பார்கள். அவர்கள் எங்கே இருப்பார்கள் என்பதை, எங்களுடைய NSW நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் வலைத்தளத்தில் உதவி என்பதில் சென்று பார்க்கலாம்.

நீங்கள் நீதிமன்றத்துக்கு செல்வதற்கு முன்னால் சட்ட உதவியைப் பெறுவது சிறந்தது. LawAccess NSW வில் உள்ள எங்கள் குழுவை 1300 888 529 என்ற எண்ணில் அழைக்கவும் அல்லது webchat இல் குழுவுடன் பேசுவதற்கு Chat with us என்ற பட்டனைக் கிளிக் செய்க.

பணியிலுள்ள வக்கீல்கள்

பேங்க்ஸ்டவுன், பிளாக்டவுன், பென்ரித், மவுண்ட் ட்ரூயிட் மற்றும் சதர்லேண்ட் உள்ளூர் நீதிமன்றங்களில் உதவி

பின்வரும் இடங்களில் உங்களுக்கு குற்றவியல் வழக்கு உள்ளதா:

  • பேங்க்ஸ்டவுன் உள்ளூர் நீதிமன்றம்
  • பிளாக்டவுன் உள்ளூர் நீதிமன்றம்
  • மவுண்ட் ட்ரூயிட் உள்ளூர் நீதிமன்றம்
  • பென்ரித் உள்ளூர் நீதிமன்றம், அல்லது
  • சதர்லேண்ட் உள்ளூர் நீதிமன்றம்?

பணியிலுள்ள வக்கீலிடம் சட்ட உதவி கேட்பதற்கு ஒரு எளிய வழி உள்ளது – அதற்கு எங்கள் ஆன்லைன் படிவத்தை நிரப்பினால் போதும். இந்தப் படிவம் பயன்படுத்துவதற்குத் துரிதமானது, எளிதானது மற்றும் எந்த நேரத்திலும் சமர்ப்பிக்க முடியும். சமர்ப்பித்தவுடன், லீகல் எய்டு NSW பணியாளர் ஒருவர் உங்களைத் திரும்ப அழைப்பார்.

உங்கள் H எண் உங்களுக்குத் தெரியவில்லை எனில், கேட்கப்படும் போது H0000 உள்ளிடவும்.  
மேலே பட்டியலிடப்பட்டுள்ள நீதிமன்றங்களுக்கு மட்டுமே படிவத்தைப் பயன்படுத்த முடியும்.

அவர்கள் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நாளில் யார் வேண்டுமானாலும் பணியிலுள்ள வழக்கறிஞரை குறைந்த அளவிலான உதவிக்காக அணுகலாம்.

உங்கள் வழக்கு அதிக சிக்கலுடையதாக இருந்தால், பணியிலுள்ள வழக்கறிஞர் வழக்கை ஒத்திவைப்பதில் உங்களுக்கு உதவக்கூடும். இது உங்களுக்கு சட்ட ஆலோசனை அல்லது வழக்கறிஞர் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வரையில் வேறொரு தேதிக்கு உங்கள் வழக்கை தள்ளிவைக்கும். எங்களுடைய சட்ட ஆலோசனை வலைப்பக்கத்தில் நீங்கள் மேலும் அதிகமாகத் தெரிந்துகொள்ளலாம்.

பணியிலுள்ள வழக்கறிஞரால் உங்களுக்கு என்ன செய்யமுடியம் என்பதில் வரம்புகள் உள்ளன. பணியிலுள்ள வழக்கறிஞரால் பின்வருபவற்றைச் செய்ய இயலக்கூடும்:

  • உங்கள் வழக்கு பற்றி உங்களுக்கு ஆலோசனை வழங்குதல்
  • நீதிமன்றத்தில் என்ன நடக்கலாம் என்பது பற்றி விளக்கமளித்தல்
  • உங்களுக்கு சட்ட ஆலோசனை கிடைக்கும் வகையில், உங்கள் வழக்கை வேறொரு தேதிக்கு தள்ளிவைக்கும்படி கோருவதற்கு உங்களுக்கு உதவுதல்
  • உங்கள் சார்பாக நீதிமன்றம்/தீர்ப்பாயம் அல்லது பிற தரப்பினர்களுடன் பேசுதல்
  • உங்கள் நீதிமன்ற ஆவணங்கள் அல்லது அவரசமான நீதிமன்ற விண்ணப்பங்கள் ஆகியவற்றில் உங்களுக்கு உதலாம், அல்லது
  • நீதிமன்றத்தில் உங்களுக்காக பேசுதல்.

குடும்ப சட்ட விவகாரங்களில், உங்கள் முன்னாள் துணைவர்/துணைவி உங்கள் குழந்தையைத் திருப்பி அனுப்பவில்லை அல்லது அவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுவேன் என மிரட்டுதல் போன்ற அவசரமான குடும்ப சட்டப் பிரச்சனைகளிலும் பணியிலுள்ள வழக்கறிஞரால் உதவ இயலக்கூடும்.

குற்றவியல் விவகாரங்களில் நீங்கள் குற்றமற்றவர் என வாதாடுகிறீர்கள் எனில், மேலும் உங்கள் விவகாரம் அந்த நாளில் விசாரணைக்கு பட்டியலிப்பட்டிருந்தால் அவர்களால் நீதிமன்றத்தில் உங்கள் பிரதிநிதியாக செயல்படமுடியாது.

சாட்சியங்கள் நீதிமன்றத்துக்கு வந்து என்ன நடந்தது என்பது பற்றி பேசுவது மற்றும் நீதிவான் அல்லது நீதியரசர் இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களையும் கேட்பதை விசாரணை என்கிறோம்.

ஒரு விசாரணையில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அல்லது உங்களுக்காகப் பேச யாராவது தேவையெனில், உங்கள் விசாரணை தேதிக்கு வெகுநாள் முன்பே லீகல் எய்டு NSW ஐச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரிடம் அல்லது சட்ட உதவிப் பணிகளைச் செய்யும் ஒரு வழக்கறிஞரிடம் நீங்கள் பேச வேண்டும். எங்களுடைய சட்ட ஆலோசனை வலைப்பக்கத்தில் நீங்கள் இதைப் பற்றி மேலும் அதிகமாகத் தெரிந்துகொள்ளலாம்.

NSW வில் உள்ள எல்லா உள்ளூர் நீதிமன்றங்கள், நீதிமன்ற அமர்வு நடைபெறும் எல்லா குடும்ப சட்ட நீதிமன்ற இடங்கள் மற்றும் NSW முழுவதிலும் உள்ள பிற பல நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் நாங்கள் பணியிலுள்ள வழக்கறிஞர்களை வைத்திருக்கிறோம்.

உங்கள் இடத்தில் உதவி கிடைக்கிறதா என்பதை, எங்களுடைய NSW நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் வலைத்தளத்தில் உதவி என்பதில் சென்று பார்க்கலாம்.

அந்த நாளில் பணியிலுள்ள வழக்கறிஞரரைப் பார்த்து உதவி பெறுவது இலவசம்.

நீங்கள் தொடர்ந்து உதவி பெறுவதாக இருந்தால், நீங்கள் சட்ட உதவிக்கு தகுதி பெற்றிருக்க வேண்டும் மேலும் உங்கள் வழக்கு தொடர்பான செலவுக்கு பணப்பங்களிப்பைச் செலுத்த வேண்டியிருக்கும்.

நீங்கள் செலுத்த வேண்டிய தொகை, நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் மற்றும் உங்களிடம் சொந்தமாக என்னவெல்லாம் இருக்கிறது என்பதைப் பொறுத்திருக்கிறது.

குற்றவியல் சட்ட விவகாரங்களில், பணியிலுள்ள வழக்கறிஞர் உங்களுக்கு ஆலோசனை மட்டுமே வழங்குகிறார் அல்லது இது உங்களுடைய முதல் வருகை மற்றும் நீங்கள் காவலில் இருக்கிறீர்கள் எனில் நீங்கள் சட்ட உதவிக்கான தகுதி பெற்றவராக இருக்க வேண்டியதில்லை. பணியிலுள்ள வழக்கறிஞர் உங்களுக்காக நீதிமன்றத்தில் முன்நிலைபடுகிறார் எனில், பொதுவாக நீங்கள் சட்ட உதவிக்கான தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.

குடும்ப சட்ட விவகாரங்களில், ஒரு பணியிலுள்ள வழக்கறிஞரிடம் அல்லது சமூக உதவி சேவைகள் அமைப்பிடமிருந்து நீதிமன்றத்தில் உதவி பெறுவதற்கு நீங்கள் சட்ட உதவிக்கான தகுதி பெற்றவராக இருக்க வேண்டிய தேவையில்லை.

சில நேரங்களில் சட்டம் சார்ந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்வது கடினம். ஆங்கிலம் உங்கள் முதல் மொழியாக இல்லாமல் இருந்தால் அல்லது நீங்கள் ஆஸ்லென் (Auslan) சைகை மொழி மூலம் தகவல் தொடர்பைச் செய்ய விரும்பினால், நீதிமன்றத்தில் உங்களுக்கு உதவ உங்களுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவைப்படலாம்.

பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றமே மொழிபெயர்ப்பாளருக்குப் பணம் செலுத்தும், மேலும் முடிந்தளவு விரைவில் ஒருவரை ஏற்பாடு செய்ய அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவை என நீதிமன்றம் முடிவு செய்தால், விசாரணையை வேறொரு நாளுக்கு ஒத்தி வைக்க வேண்டியது அவசியமாகலாம்.

எங்களைத் தொடர்பு கொள்ள உங்களுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் அல்லது பிற தகவல் தொடர்பு உதவி தேவையெனில், எங்களுடைய வலைப்பக்கத்தில் Contact us என்ற பிரிவில் உள்ள தெரிவுகளைப் பார்க்கவும்.

நீதிமன்றத்துக்கு வரும்போது நீங்கள் செய்ய வேண்டியவை:

  • உங்கள் விவகாரம் தொடர்பான எல்லா ஆவணங்களையும் சேகரித்துக் கொண்டு வரவும் - குற்றவியல் விவகாரங்களில், காவல்துறையின் விசாரணை அறிக்கைகள் மற்றும் நடத்தைக் குறிப்புகள், குடும்ப சட்ட விவகாரங்களில் ஏதேனும் உத்தரவுகள் மற்றும் பிற நீதிமன்ற ஆவணங்களின் நகல்கள், உரிமையியல் விவகாரங்களில் உங்கள் சட்ட விவகாரம் தொடர்பான ஏதேனும் கடிதங்கள் அல்லது அபராத அறிவிப்புகள் ஆகியவற்றின் நகல்கள் ஆகியவை அடங்கியிருக்கலாம்
  • உங்கள் விசாரணை நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பே நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்துக்கு வந்துவிடவும் - பணியிலுள்ள வழக்கறிஞரைப் பார்க்க நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கலாம்
  • நாள் முழுவதையும் இதற்கு ஒதுக்கிவிடுவதை உறுதிசெய்யவும் - சில நீதிமன்றங்கள் எல்லா வழக்குகளையும் ஒரே நேரத்தில் பட்டியலிடும், எனவே உங்கள் விசாரணைக்காக நீங்கள் சில மணிநேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம், நீங்கள் இதை நீதிமன்றத்தில் கேட்டு சரிபார்த்துக் கொள்ளலாம்
  • உங்களுக்கு மொழிபெயர்ப்பாளரோ அல்லது வேறு உதவியோ தேவையெனில் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தவும், மற்றும்
  • தேவையெனில் உங்கள் உதவிக்கு ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரை உடன் அழைத்து வரவும்.

நீதிமன்றத்தில் உங்கள் பாதுகாப்பு பற்றி உங்களுக்கு கவலை இருந்தால், உங்கள் கவலைகளைப் பற்றி விவாதிக்க உங்கள் விசாரணை தேதிக்கு முன்பே நீங்கள் நீதிமன்றத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும், நீங்கள் நீதிமன்ற கட்டிடத்துக்குள் நுழையும் போது பாதுகாவலரிடம் பேசுங்கள் அல்லது நீதிமன்றத்துக்கு செல்வதற்கு முன் எங்களிடம் பேசுவதற்கு எங்கள் Contact us பக்கத்திலுள்ள விவரங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

நீங்கள் நீதிமன்றத்துக்கு வரும் அந்த நாளில் பணியிலுள்ள வழக்கறிஞரால் உங்கள் வழக்கை முடித்து வைக்க இயலாமல் போகலம். உங்கள் வழக்கும் மிகவும் சிக்கலானதாக இருந்தால், வழக்கை ஒத்திவைக்கும்படி (உங்கள் விசாரணையை வேறொரு நாளுக்கு தள்ளிவைத்தல்) கோருவதில் பணியிலுள்ள வழக்கறிஞர் உங்களுக்கு உதவக்கூடும், இதன்மூலம் உங்களுக்கு சட்ட ஆலோசனை அல்லது பிரதிநிதித்துவம் பெறும் வாய்ப்பைப் பெறலாம்.

உங்களுக்கு மேலும் அதிகமான சட்ட உதவி தேவையெனில், லீகல் எய்டு NSW வின் பணியிலுள்ள வழக்கறிஞர்கள் தொடர்ந்து உங்களுக்கு உதவக்கூடும் அல்லது ஒரு வழக்கறிஞர் உங்கள் வழக்கை நடத்துவதற்கான சட்ட உதவிக்கு விண்ணப்பிப்பதில் உங்களுக்கு உதவுவார்கள். எங்களைடைய Apply for legal aid வலைப்பக்கத்தில் நீங்கள் இதைப் பற்றி மேலும் அதிகமாகத் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு உதவக்கூடிய பிற சேவைகளையும் எங்களால் உங்களுக்குப் பரிந்துரை செய்ய இயலக்கூடும்.

பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள் லீகல் எய்டு NSW வின் பணியிலுள்ள வழக்கறிஞரிடமிருந்து அல்லது பழங்குடியினர் சட்ட சேவை (NSW/ACT) அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞரிடமிருந்து நீதிமன்றத்தில் உதவியைப் பெறமுடியும்.

நீங்கள் 18 வயதுக்குட்பட்டவராக இருந்து, நீதிமன்றத்தில் உதவி தேவைப்பட்டால், 1800 10 18 10 என்ற எண்ணில் யூத் ஹாட்லைனை அழைக்கவும்.

இந்த ஹாட்லைன் வார நாட்களில் காலை 9 மணிமுதல் நள்ளிரவு வரையிலும், வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை மற்றும் பொது விடுமுறை நாட்களில் 24 மணிநேரமும் செயல்படுகிறது.

பெண்களுக்கான குடும்ப வன்முறை தொடர்பான நீதிமன்ற வக்காலத்து சேவைகள் NSW க்கு அருகிலுள்ள பல உள்ளூர் நீதிமன்றங்களில் குடும்ப வன்முறையை எதிர்கொள்ளும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்கிறது.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப சட்ட நீதிமன்றங்களில் உதவுவதற்கு குடும்ப வக்காலத்து மற்றும் உதவி சேவைகள் அமைப்பிலிருந்து ஆண் மற்றும் பெண் இருவருக்கும் உதவிப் பணியாளர்கள் கிடைக்கின்றனர்.

குழந்தைகளுக்கான நீதிமன்ற உதவித் திட்டத்தைச் சேர்ந்த இளைஞர் நலப் பணியாளர்கள்,  
சிறார் நீதிமன்றங்களுக்கு வரும் இளம் வயதினருக்கு உதவுகிறார்கள்.